சென்னை: "சென்னை நகரம்" வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று அழைக்கப்படுகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்து வருபவர்களும் தங்களின் வாழ்க்கையை வளமாக்கி கொள்ளும் அளவிற்கு பாகுபாடற்ற பண்பாட்டுடன் பழகும் மக்கள் நிறைந்த நகரமாக சென்னை உள்ளது. இங்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பூர்வீகத்தை கொண்டவர்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா என்று பெருமையுடன் சென்னையை குறிப்பிட்டு சொல்ல முடியும்.
பழைய மெட்ராஸ் :மொழி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றில் வேறுபட்ட பலரை ஒன்றிணைக்கும் நகராக சென்னை விளங்கி வருகிறது. இதன் பெயர் "மெட்ராஸ்" என்பதில் இருந்து "சென்னை" என 1996ஆம் ஆண்டு மாற்றப்பட்டாலும், இந்நகரின் தொடக்கம் என்பது 383 ஆண்டுகளுக்கு முந்தையது. அதாவது, மதராசப்பட்டினம் என்ற கிராமத்தை கிழக்கிந்திய நிறுவனத்திற்கு விற்ற நாளான 1639 ஆகஸ்ட் 22ஆம் தேதி "மெட்ராஸ் தினம்" என்று கொண்டாடப்பட்டது.
சென்னை தினம் 2022 :மெட்ராஸ் என்ற பெயர் சென்னையாக மாற்றப்பட்டதால், மெட்ராஸ் தினம் "சென்னை தினம்" என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மதராசப்பட்டினத்தில் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் பல காலப்போக்கில் மறைந்தோ அல்லது மாற்றம் செய்யப்பட்டும் இருக்கின்றன.
வர்த்தகத்தை குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட ஆங்கிலேயர்களின் கண்ணில் பட்டது பக்கிங்ஹாம் கால்வாய். சென்னைக்குள் ஒரு நீர் வழிப்பாதை இருந்தால் பொருட்களை எளிதாக எடுத்து செல்லலாம். ஆனால் இந்த கால்வாய் சென்னைக்குள் மட்டுமின்றி ஆந்திரா வரை 800 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்டிருந்தது. இதனை ஆங்கிலேயர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். 19ஆம் நூற்றாண்டில் மிக முக்கிய நீர்வழித்தடமாக காணப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு பலரும் பக்கிங்ஹாம் கால்வாயில் பயணித்தனர்.
வர்த்தகம் மேம்பட இந்த கால்வாய் மிக முக்கிய பங்காற்றியது. 1870களில் சென்னையில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்ட போது, உணவு தானியங்கள் கொண்டு வர உறுதுணையாக இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்புகளால் கால்வாயின் அகலம் குறைந்து போனது. கழிவுகளால் மாசடைந்தது. முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த போக்குவரத்து சாதனங்களில் வித்தியாசமான டிராம் வண்டிகளில் ஏறிவிட்டால் நடத்துநரிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும். 1877ல் தொடங்கி 1953 வரை சுமார் 80 ஆண்டுகள் சென்னை நகரை டிராம் வண்டிகள் வலம் வந்தன.