சென்னை:இந்த ஆண்டிற்கான கடைசி சந்திர கிரகணம் இன்று நடக்கவுள்ளதால், தமிழகத்தில் உள்ள பல கோயில்களின் நடை இன்று சாத்தப்படுவதாக கோயில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.
கிரகணம் எப்படி நிகழ்கிறது?:முழு நிலவு நாளில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, அதாவது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முழு நிலவின் மேல் பூமியில் நிழல் படும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
அதைப்போல சந்திரனின் ஒரு பகுதியில் மேல் பூமியில் நிழல் விழிந்தால் பகுதி சந்திர கிரகணம் ஏற்படும். அப்படியெனில், ஓவ்வொரு மாதமும் சந்திரகிரகணம் ஏன் ஏற்படுவது இல்லை என கேள்வி எழலாம். அதாவது, நிலவு பூமியை சுற்றி வந்தாலும், எப்போதும் அது பூமியின் நிழலுக்குக் கீழ் வருவது கிடையாது.
பூமியைச் சுற்றிய நிலவின் வட்டப்பாதை சற்று சாய்வானது. அதனால் நிலவு பூமிக்குப் பின் இருந்தாலும், அதன் மீது நிழல் படாமல் போவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் ஆண்டில் ஏதேனும் 2 முறை மட்டுமே இரண்டும் நேர்க்கோட்டிற்கு வரும். இதனால்தான் சந்திர கிரகணம் அரிதாகவே நடக்கிறது.
நம்பிக்கைகள்:விஞ்ஞானிகள் இது ஒரு சாதாரண வானியல் நிகழ்வு என்று கருதுவார்கள். ஆனால் அதேநேரத்தில், ஆன்மிகவாதிகள் இதை ஜோதிடம் மற்றும் மதத்துடன் சம்பந்தப்படுத்துவார்கள். பல நூற்றாண்டுக்கு முன்னர் கிரகணம் ஏற்பட்டபோது அனைத்து புனித ஸ்தலங்களும் மூடப்பட்டன. அப்போது யாத்திரிகர்கள் தெருவுக்கு தெரு சென்று சத்தமாக கூச்சலிட்டு பிச்சை கேட்பதை வழக்கமாக செய்துள்ளனர்.
ராகு மற்றும் கேது என்பது நிழலின் கிரகங்கள் ஆகும். இந்த ராகு, சூரியனையோ அல்லது சந்திரனையோ விழுங்க நினைக்கும் தருணம்தான் கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.