சென்னை:சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயிலில், நேற்று (அக்.25) இருசக்கர வாகனத்தில் வந்த கருக்கா வினோத் என்பவர், பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் செல்ல முயன்றார்.
அப்போது ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில், அவர் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்த மூன்று பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதன்பின் ரவுடியிடம் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் என்ன? பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்று கிண்டி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனிடையே, சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில், IPC 124-இன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
மேலும், பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற நபர் 2 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நவம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 என்றால் என்ன? இந்திய குடியரசுத் தலைவர் அல்லது மாநிலத்தின் ஆளுநரின் சட்டப்பூர்வ அதிகாரங்களில் ஏதாவது ஒன்றை, ஏதாவது ஒரு முறையில் பயன்படுத்துவதற்கு அல்லது தவிர்ப்பதற்கு அத்தகைய குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரைத் தூண்டும் அல்லது கட்டாயப்படுத்தும் உள் நோக்கத்துடன், அத்தகைய குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரைத் தாக்கினால் அல்லது முறையின்றித் தடுத்தால் அல்லது முறையின்றி தடுப்பதற்கு முயன்றால் அல்லது குற்றமுறு பலப்பிரயோகக் காட்டுதலால் பணிய வைத்தால் அல்லது அவ்வாறாக பணிய வைக்க முயன்றால் ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை அபராதத்துடன் விதிக்கப்படும்.
இதையும் படிங்க:“சட்டம் ஒழுங்கு சீர்குலைய தமிழக அரசே காரணம்” - ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்