சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழ்நாடு சார்ந்த பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் புயலைக் கிளப்பின. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A.வில் இடம்பெற்றிருக்கும் திமுக பல்வேறு வாதங்களை முன்வைத்த நிலையில், அதற்கு பதிலடியாக பிரதமர் முதல் நிர்மலா சீதாராமன் வரையிலும் திமுகவை விமர்சிக்கத் தவறவில்லை.
கச்சத்தீவு குறித்த பிரதமரின் பேச்சு விவாதத்தை உருவாக்கிய நிலையில், ஜெயலலிதாவை நீங்கள் நடத்தியது தெரியாதா? என திமுகவைப் பார்த்து நிர்மலா சீதாராமன் எழுப்பிய கேள்வி சற்று தாமதமாக தமிழ்நாடு அரசியலில் புயலாக மையம் கொண்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் 2வது நாளாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி பேசிய திமுக எம்.பி.கனிமொழி, மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை மகாபாரதத்தில் துகிலுரியப்பட்ட திரௌபதியுடன் ஒப்பிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நிர்மலா சீதாராமன், 1989ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் ஆடை இழுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும், எனவே திமுகவுக்கு திரௌபதி குறித்து பேச தகுதியில்லை என கூறினார்.
இச்சம்பவம் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த பின்னர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிர்மலா சீதாராமன் வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசியுள்ளதாகவும், ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை எனவும் கூறியதோடு, அது ஜெயலலிதாவாகவே நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள் என கூறினார்.
மேலும், இப்படி சட்டமன்றத்தில் நடக்க வேண்டியதை முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசியதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு அதிமுகவிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆற்றியுள்ள எதிர்வினையில், மு.க.ஸ்டாலினின் கருத்து ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் செயல் என்று கூறியுள்ளார். சம்பவம் நடந்ததாக கூறப்படும் 1989ம் ஆண்டில் தானும் எம்எல்ஏ வாக சட்டப்பேரவையில் இருந்ததாகவும், அன்றைய தினம் ஜெயலலிதா மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு தானே சாட்சி எனவும் கூறியுள்ளார்.