தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிபதிகள் குறித்து அவதூறு காணொலி வெளியிட்ட முன்னாள் நீதிபதி: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு! - justice karnan

சென்னை: நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு காணொலிகளை வெளியிட்டுவரும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What action taken based on complaint against justice karnan, MHC queries
What action taken based on complaint against justice karnan, MHC queries

By

Published : Nov 23, 2020, 7:44 PM IST

சமூக வலைதளங்களில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகளை அவதூறாகச் சித்திரித்து தொடர்ந்து காணொலிகளை வெளியிட்டுவரும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் நீதிபதி கர்ணன் வெளியிட்ட காணொலிகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், புகார்கள் தொடர்பாக முன்னாள் நீதிபதி கர்ணன் நவம்பர் 26ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் பிறப்பிக்கும் உத்தரவை நிறைவேற்ற தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பார் கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும் தொடர்ந்து காணொலிகளை கர்ணன் வெளியிட்டுவருவதாகவும், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், முன்னாள் நீதிபதி கர்ணன் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details