சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஜூன் 15ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான அளவில் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.