வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 24 மணி நேரத்தில், எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (அக். 13) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 14: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
அக்டோபர் 15: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும்; ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 16: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய வட மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 17:சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.