அரும்பாக்கத்தில் சாலையோரக் கடைகளை அகற்றும்போது காவல் துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவரைத் தாக்கிய உதவி ஆணையர் உள்பட மூன்று காவல் அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் முக்கியப் பிரமுகரான பொன். கிருஷ்ணமூர்த்தி, "சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரபாண்டியன் அலுவலர்களிடம் சென்று கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வியாபாரிகளின் கடைகளை எந்தவித முன்னறிவிப்பின்றி அகற்றும் பணியில் ஈடுபடுவதால் வியாபாரிகள் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும், கால அவகாசம் கொடுத்துவிட்டு அகற்றும் பணியில் ஈடுபடுங்கள் எனக் கூறினார்.
ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டதால் வீரபாண்டியன், கட்சித் தொண்டர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, உதவி ஆணையர் ஜெயராமன், இரண்டு காவல் ஆய்வாளர்கள் வீரபாண்டியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொது இடத்தில் அவரது சட்டையை கிழித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் உதவி ஆணையர் ஜெயராமன், இரண்டு காவல் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். அதற்கு காவல் ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்" எனக் கூறினார்.