சென்னை:அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஓபிஎஸ் தரப்பினர் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து டிடிவி தினகரன், ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் பேசிய டிடிவி தினகரன், “அதிமுகவை மீட்கவே இருவரும் ஒன்றிணைந்துள்ளோம். உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்களை ஒன்றிணைக்க உள்ளோம். ஓ.பன்னீர்செல்வத்துடன் எந்த மனக்கசப்பும் இல்லை. மனதளவில் எந்த பகையுணர்வும் இல்லை. நேரில் சந்திக்கவில்லையே தவிர, அடிக்கடி ஓ. பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தேன்.
ஓ. பன்னீர்செல்வத்தை நம்பி, அவர் கைப்பிடித்து இருட்டில் கூட செல்ல முடியும். பழனிசாமியை நம்பி செல்ல முடியுமா?. பழனிசாமி ஒரு துரோகி. திமுக எங்களுக்கு எதிரி.
இரு அணியினரும் இணைந்து செயல்பட முடிவு; ஓபிஎஸ் - டிடிவி தினகரன் கூட்டாகப் பேட்டி! - ops and ttv dinakaran political move
அதிமுகவை மீட்க ஒன்றிணைந்துள்ளோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
சிபிஎம்(மார்க்சிஸ்ட்), சிபிஐ(இந்திய கம்யூனிஸ்ட்) போல், அமமுக - ஓபிஎஸ் அணியும் இணைந்து செயல்படும். பாஜகவுடன் கூட்டணி, காங்கிரஸுடன் கூட்டணி அல்லது தனித்துப் போட்டி என நாடாளுமன்ற தேர்தலில் மூன்று வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக சந்திப்பு குறித்து பேசியுள்ளோம். தொண்டர்கள் விருப்பப்படியே இணைந்துள்ளோம்'' எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''பழைய விவகாரங்களை மறந்து இருவரும் ஒன்றிணைந்துள்ளோம். இருவரும் இணைந்து பல மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். சசிகலாவையும் சந்திக்க உள்ளோம். ஒரு சிலரை மட்டும் தவிர, மற்றவர்கள் அதிமுகவில் இணைவது என்பது எடப்பாடி பழனிசாமியின் சுயநலம். அமமுக தனி இயக்கம். நாங்களும் தனி இயக்கம். வருங்காலங்களில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அரசியல் செய்வோம்.
எங்களுடைய சட்டப்போராட்டம் தொடரும். உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்களை நாங்கள் ஒன்றிணைப்போம். முதலமைச்சர் மருமகன் சபரீசன் என்னை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார். பணத்திற்காக ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே, எடப்பாடி பழனிசாமியுடன் உள்ளனர். தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம்தான் உள்ளனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்திக்க இருக்கிறோம்'' எனக் கூறினார்.