தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சித்த மருத்துவத்தால் கரோனாவை குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்யப்படுகிறது'

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

hc
hc

By

Published : Mar 30, 2020, 7:54 PM IST

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார், ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவரான கே.எம். செந்தமிழ்செல்வன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், ”கரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும், யுனானி மருத்துவத்திலும் இந்நோயைப் பரிபூரணமாக குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக்காட்ட முடியும். சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், செந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பலவகை மூலிகைகளை ஒன்றாகக் கலந்து மருந்தாக உட்கொண்டாலே கரோனா உள்ளிட்ட எல்லா வகையான வைரஸ்களும் அழிக்கப்பட்டுவிடும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அவரவர் வீடுகளில் இருந்தவாறு ஸூம் செயலியை பயன்படுத்தி வீடியோ கால் மூலம் வழக்குகளை விசாரித்தனர்.

அப்போது கரோனாவை சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி குணப்படுத்த முடியுமா என்பதைக் கண்டறிய மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details