சென்னை: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் வெளியிடப்படும் எனவும், தமிழ்ப் பாடத்தில் கட்டாயம் குறிப்பிட்ட மதிப்பெண் பெற வேண்டும் என கூறவில்லை என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும், வரும் 23ஆம் தேதி துணைவேந்தர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் என்ற முறையில் தனது தலைமையில் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கல்லூரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், ஆசிரியர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ”தமிழ்நாடு முழுவதும் உள்ள 163 அரசுக் கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனையில் கலந்துகொண்டனர். அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் 25 சதவீதம் கூடுதலாக இடம் கொடுக்கப்பட்டதன் விளைவாக 1,53,323 இடங்கள் உருவாக்கப்பட்டன.
அதில் 1,31,173 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள இடங்களில் மாணவர் சேர்க்கையை 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் ’நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில கல்லூரிகளில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. ’நான் முதல்வன்’ திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாடத்திட்டங்களை மாற்றவும் நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் பற்றாக்குறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வுக் கூட்டம் என்பதால் கல்லூரி முதல்வர்களும் சில கருத்துகளை முன் எடுத்து வைத்துள்ளனர்.
அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், காலியாக உள்ள 1,895 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கான கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டும் நியமிக்கும் வகையில் கல்லூரி மண்டல இயக்குநர் அலுவலகங்களில் தேர்வுக் குழு அமைத்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கடந்த ஆட்சியில் தகுதியானவர்களை நியமனம் செய்வதில் விதிமீறல்கள் நடைபெற்று உள்ளன. அது போன்று நடைபெறாத வகையில் கவுரவ விரிவுரையாளர் பணியிடம் நிரப்பப்படும்.
உதவிப்பேராசிரியர் பணிக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்படும்:கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பாடத்திட்டங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். உதவிப்பேராசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வில் தமிழ் பாடத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற வேண்டும் என்பது இல்லை. கவுரவ விரிவுரையாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த ஆண்டிற்கு ஏற்ப அனுபவத்திற்கு மதிப்பெண் அளிக்கப்பட உள்ளது.
பல்கலைக் கழகங்களின் இணை வேந்தர் என்ற முறையில் வரும் 23ஆம் தேதி துணைவேந்தர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. மாணவிகளுக்கு சுழற்சி முறை கல்லூரிகளை கொண்டு வந்ததே திமுக தான். அதனால் பெண்கள் கல்வியறிவு உயர்ந்துள்ளது. எனவே, சுழற்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்படாது.
ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம். அரசுக் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு இறுதியில் தாமதமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதுகுறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 14 கல்லூரிகளில் 7 கல்லூரிகளுக்கும் நாங்கள் நிதி ஒதுக்கி கட்டடங்களை கட்டி வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு வாய்ப்பே இல்லை - ஈபிஎஸ் தடாலடி!