சென்னை:வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. மாலை நிலவரப்படி ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 3ஆயிரத்து 675 கன அடியாக உள்ளது.
ஏரியின் முழுக் கொள்ளளவான 24 அடியில், 20. 73 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. தொடர் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஏரியின் பாதுகாப்புக்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மதகுகள் வழியாக விநாடிக்கு ஆயிரத்து 46 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரால் எந்தப் பாதிப்பும் இல்லை. செம்பரம்பாக்கம் ஏரியை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணித்து வருவதால் அதில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.