3 நாட்களாக வெள்ளத்தில் தத்தளிக்கும் புளியந்தோப்பு சென்னை:தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை டிச.4, 2023 அன்று புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் (MICHAUNG) டிச.5ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையின் பாதிப்பு மற்றும் வெள்ளம் வடிந்தாலும் கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீட்டிலும் நிவாரண முகாம்களில் முடங்கியுள்ளனர்.
சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பல பகுதிகளில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலரும், தங்களால் முடிந்த வரை பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இருந்த போதிலும் மழை விட்டு 3 நாட்கள் ஆகியும் புளியந்தோப்பு பகுதியில் மழை நீர் வடியாமல் இடுப்பளவிற்கு நிற்பதாகவும், இதுவரை அதிகாரிகளோ அல்லது வேறு தன்னார்வலர்களோ வந்து தங்களை பார்க்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
மத்திய சென்னை, தென் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வரும் அரசு அதிகாரிகள் இதுவரையிலும் தங்கள் பகுதிகளுக்கு யாரும் வரவில்லை எனவும், குறைந்த பட்சம் குழந்தைகளுக்காவது பால் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.
மேலும் வயதானவர்கள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். அவர்களை இங்கிருந்து மீட்பதற்கு ஒரு படகு உதவியும் வேண்டுமென மக்கள் தெரிவித்துள்ளனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருந்தால் அருகில் உள்ள அரசு பள்ளிகளும், சமூக நலக்கூடங்களிலும் பொதுமக்கள் தங்கி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் புளியந்தோப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக சமூக நலக்கூடமும் நீரில் மூழ்கியுள்ளது. அதனால் முடிந்தவரையில் படகு மூலமாக மழைநீரில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நிலவில் தண்ணீரைத் தேட பல்லாயிரம் கோடி செலவு செய்வது ஏன்?.. வேளச்சேரிக்கு படகில் சென்று பார்வையிடலாமே..! - இயக்குநர் பார்த்திபன்