சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னையில் நேற்று (நவ.10) முதல் இன்று (நவ.11) காலை வரை சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று (நவ.10) இரவு முதல் விடிய விடிய காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழைநீர் கடல் போல் தேங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழை நீடிக்கும்
இந்நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் மூன்று மணி நேரத்திற்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கி வருவதால் அடுத்த ஆறு மணி நேரத்திற்குச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று (நவ.10) இரவு முதல் பெய்துவரும் கனமழையால், சென்னையில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 செ.மீ மழையும், எண்ணூரில் 17 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், வில்லிவாக்கத்தில் 12 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம் சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம், சுரங்கப்பாதைகளில் அதிகளவில் மழை நீர் தேங்கியுள்ளதால், சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி நடவடிக்கை தெரிவித்துள்ளது
இதையும் படிங்க: கனமழை எதிரொலி: 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை