சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முகக் கவசம் அணியாத மக்களிடம் முகக் கவசம் அணிய வேண்டுமென வலியுறுத்தினார். மேலும் அவர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலித்து, இதுபோன்று முகக் கவசம் அணியாத அனைவரிடமும் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டார்.
பின்னர் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், "சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரங்களுக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதில் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இருப்பினும், லண்டனில் இருந்து வருபவர்களுக்கு தமிழ்நாட்டில் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு ஏதேனும் அறிகுறி இருப்பின் தனிமைபடுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவார்கள். சென்னையில் கரோனா கண்காணிப்பு மையங்கள் நான்காயிரம் படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளன. மற்ற மாவட்டங்களிலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அச்சப்பட தேவையில்லை.
கரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிலும் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்க கூடாது. இதற்கான எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது. இதனால் மக்கள் முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், கரோனா விதிகளை பின்பற்றாத 14 லட்சத்து 21ஆயிரத்து 350 நபர்களிடம், 13 கோடியே 5லட்சத்து 700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.