தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய் துறை மற்றும் தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக சேலம் மாநகராட்சியை மறு சீரமைத்து தர வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானத்தை சேலம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் முன்வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, “மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி பகுதிகள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சேலம் மாநகராட்சி மறு சீரமைத்து தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சேலம் மாநகராட்சியில் 8,29,000க்கும் மேல் மக்கள் தொகை இருந்தது. அது தற்போது 2021ஆம் ஆண்டு கனக்கெடுக்கின்படி 9.52 லட்சமாக உயர்ந்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையிலும் வரப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையிலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் வார்டு வரையறை செய்வதற்கான பணிகள் நடத்தப்படும்.
மாநகராட்சியில் மக்கள் தொகை மூன்று லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் 52 வார்டுகள் இருக்கலாம். மக்கள் தொகை 3 லட்சத்துக்கும் மேல் இருந்தால் 58 வார்டுகள் இருக்கலாம். மக்கள் தொகை 60 லட்சத்துக்கு மேல் இருக்கும்பட்சத்தில் 200 வார்டுகள் அமைப்பதற்கான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் மாநகராட்சியில் உள்ள வார்டுகள் மறுசீரமைக்கப்படும்” என்றார்.