சென்னை:சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞரின் பாதையில் ஒரு பயணம் என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், செம்மொழிப் பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், கண்ணகி சிலை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் ஆகியவற்றை பார்வையிட உள்ளனர்.
இவர்களுக்கான வாகன பயணத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமாெழி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் என்கிற பெயரில் அவரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சிறப்பான திட்டத்தை, பள்ளி மாணவர்களை தேர்வு செய்து வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் காண்பித்து முக்கியத்துவத்தை கூறவுள்ளோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் NEET, JEE ஆகிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதில் ரூ.4.27 கோடி செலவினத்தை தவிர்த்திருக்கலாம். 385 பயிற்சி மையங்களுக்கு தலா 55,000 ரூபாய் செலவில் வாங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.