சென்னை:அரசுப் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் குத்துச்சண்டை வீரர் பாலாஜி, மாணவி சிந்து ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று விசாரித்தார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
குத்துச்சண்டை வீரர் பாலாஜி அப்போது பேசிய அவர், “விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவில் பாலாஜி என்கிற குத்துச் சண்டை வீரருக்கு, விளையாட்டுப் போட்டியில் தோலில் ஜவ்வு கிழிந்து சிகிச்சைப்பெற்று வந்தார். மருத்துவக் குழு அவருக்கு நல்ல சிகிச்சையளித்து தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
தீ காயங்களுக்கு சிகிச்சைப் பெற்று வரும் சூரியகுமார் அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரியகுமார் என்கிற சிறுவன் தீ காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவரை இங்கு அழைத்து வந்து அவருடைய பெற்றோரை தன் சட்டப்பேரவை உறுப்பினர் குடியிருப்பில் தங்க வைத்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தச் சிறுவன் தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
சிந்து என்கிற 12ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்ததில் கால் எலும்புகள் மற்றும் தாடை பாதிக்கப்பட்டது. அந்த மாணவி தேர்வு எழுத அவசர ஊர்தியில் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று தேர்வு எழுதினார். தேர்வு முடிந்து தற்போது அந்த மாணவி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தென்காசியைச் சேர்ந்த சிறுமி பிளிக்சின் பவுடர் சாப்பிட்டு மெலிந்த நிலையில் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மருத்துவத்துறை இதுபோன்ற அபாயகரமான நிலையில் உள்ள குழந்தைக்கு நல்ல சிகிச்சையை அளித்து வருகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின்கீழ் செயல்படும் தேசிய நல வாழ்வு குழுமத்தில் பலர் பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களில் 28ஆயிரத்து 982 பேருக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வு ஏற்கெனவே வழங்கப்பட்டது. தற்போது 5ஆயிரத்து 971 மருத்துவ காலப் பணியாளர்களுக்கு ஏப்ரல் மாதம் கணக்கிட்டு 30 விழுக்காடு ஊதிய உயர்வு என்ற அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் 4ஆயிரத்து 848 செவிலியர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வைத்தனர். அவர்களுக்கு 14ஆயிரம் ரூபாயில் இருந்து 18ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப்படுகிறது. சுகாதாரப் பணியாளர்கள் 2ஆயிரத்து 448 பேருக்கு ஊதியம் 11ஆயிரம் ரூபாயை 14ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. தேசிய நல்வாழ்வு இயக்கத்தில் பணியாற்றி வரும் 13ஆயிரத்து 267 ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
தேசிய நல வாழ்வு குழுமத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று மகப்பேறு விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புதிதாக ஈரோடு, கரூர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் புனர் வாழ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 29 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.
தேசிய நல்வாழ்வு இயக்கத்தில் பணியாற்றும் ஒப்பந்தப்பணியாளர்கள் எப்போதும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள். மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட செவிலியருக்கு பணி நிரந்தரம் படிப்படியாக செய்வதற்கானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
குரங்கு காய்ச்சல் பரவவில்லை: மருத்துவர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் மருத்துவப் பணியிட மாறுதலுக்கு நடைபெற்ற முறைகள் உங்களுக்கே தெரியும். குரங்கு காய்சல் என்று எதுவும் பரவவில்லை. எனவே அச்சப்படத் தேவையில்லை.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒமைக்ரான் பிஏ4 தொற்று தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டது. அவர்களைத் தாண்டி வேறு யாருக்கும் பெரியளவில் பாதிப்பு இல்லை. கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி முகாம் 12ஆம் தேதி நடைபெறும். அதில் ஒரு லட்சம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும். 18 வயது முதல் 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையிலும், தனியார் மருத்துமனைகளிலுள்ள தடுப்பூசி வீணாக கூடாது என்பதாலும், தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்களப்பணியாளர்கள், மருத்துவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 5 வயது முதல் 11 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வந்த உடன் செலுத்த தயார் நிலையில் உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நீலகிரியின் நிலத்தையும், பழங்குடியின மக்களையும் அரசு பாதுகாக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி