சென்னை:இயக்குநர் ஹரி, சாமி, அருள், தாமிரபரணி, சிங்கம் என கமர்ஷியல் படங்களை எடுப்பதில் கில்லாடி. இவரது படங்கள் எப்போதுமே ஒருவித பரபரப்புடன் ஆடியன்ஸை திருப்திப்படுத்துவது போல் இருக்கும். கடைசியாக அருண் விஜய் நடித்த யானை படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் சூர்யா கங்குவா படத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விஷாலை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். ஏற்கனவே விஷால், ஹரி கூட்டணியில் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இது விஷாலின் 34வது படமாகும்.
விஷால் லத்தி படத்தை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துள்ளார். த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த மார்க் ஆண்டனி படத்தை இயக்கியுள்ளார். வித்தியாசமான டைம் டிராவல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் செல்வராகவன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள இந்த புதிய படத்தை ஜூ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்களது கூட்டணி ஹிட்டடித்துள்ளதால் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஹரி படத்தில் இணைவது குறித்து விஷால் கூறியதாவது, இப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் ஹரியுடன் எனது மூன்றாவது படம். அதே மேஜிக்கை இதிலும் உருவாக்கும் ஆர்வத்தில் இருக்கிறேன். ரசிகர்களுக்கு இப்படத்தை மிகப் பெரிய விருந்தாக்க ஆவலுடன் இருக்கிறேன். மேலும், படப்பிடிப்பு தொடங்குகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஷாலின் சமீபத்திய படங்கள் சரியாக போகாததால் இப்படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக கொடுத்துவிட வேண்டிய கட்டாயத்தில் விஷால் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போஸ்டரிலும் அரிவாள் இருப்பதால் இது வழக்கமான ஹரி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:Leo: லியோ படப்பிடிப்பு நிறைவு - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி ட்வீட்!