சென்னை:அரசுப்பேருந்தில் ஒரு தம்பதி பயணம் செய்தனர். அவர்களின் பின் இருக்கையில் இருந்த நபர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. இதனால், அவரது கணவர், பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதத்தின்போது அந்நபர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும், தான் ஒரு காவல் அலுவலர் எனவும்; ஆவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும், ஆவடி காவல் துறை மற்றும் காவல் ஆணையரை சமூக வலைதளத்தில் பொதுமக்கள் டேக் செய்து, இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கோரிக்கை வைத்து வருகின்றனர். தொடர்ந்து இந்த வீடியோ தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.