இங்க எதுக்குடா வரீங்க..? ரயிலில் வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் - வைரலாகும் வீடியோ! சென்னை: ஓடும் ரயிலில் வடமாநில இளைஞர்களைத் தமிழ் பேசக்கூடிய ஒரு நபர் தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் வடமாநில இளைஞர்களை நீங்கள் எதற்கு இங்கே வருகிறீர்கள்? நாங்கள் தான் இருக்கிறோமே? நாங்கள் எல்லா வேலையும் செய்து பார்த்துக் கொள்வோம் எனக் கூறி அந்த நபர் இரண்டு வட மாநில இளைஞர்களை ஓடும் ரயிலில் தாக்கக்கூடிய வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் ஆபாசமாகப் பேசுதல், சிறு காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில இளைஞர்களை தாக்கிய நபர் யார்? அவர் உண்மையில் தமிழகத்தை சேர்ந்தவரா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
சமீப காலங்களாக வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக படையெடுத்து வருகின்றனர். இதனிடையே, இதற்கு தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்பினர் இதனைத் தடுக்கவேண்டும் எனவும், இவ்வாறு வேலை தேடி வருபர்கள் தேர்தலில் சமயத்தில் தமிழ்நாட்டில் வாக்குரிமை கோருவார்கள் என்றும் இதன்மூலம் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, இங்கு வாக்குரிமை கோருவார்கள் இதன் மூலம் மோடிக்கும் பாஜகவிற்குத் தமிழ்நாட்டில் ஆதரவு ஒரு பக்கம் அதிகரிக்கத் தொடங்கும் எனவும் பலர் விமர்சித்துள்ளனர். வைரலாகும் அந்த அந்த வீடியோவில் கூட இதற்கெல்லாம் காரணம் மோடி தான் என்று கூறு வாசகம் கூட அடங்கியுள்ளது. ரயில்களில் தமிழ்நாட்டிற்கு படையெடுப்போரையும் ஏற்கனவே இங்கு வந்தவர்களையும் அரசு தனிக்கவனம் செலுத்தி அவர்களை கண்காணிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, "வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்" என தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதுவாயினும் இவ்வாறு தங்களின் குடும்பத்திற்காக வேலைத் தேடி அலைபவர்களை மூர்க்கத்தனமாகத் தாக்குவது அறவே தவிர்க்க வேண்டிய ஒன்றாகும் என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'வடக்கனும் சக ஏழைதான்.. யாதும் ஊரே யாவரும் கேளிர்' - வைரலாகும் விஜய் ஆண்டனி கருத்து!