சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். இது அவருக்கு உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் தமிழ்நாட்டின் அரசியலுக்கும், திரையுலகினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். விஜயகாந்த் மறைவால் தமிழ்நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (டிச.29) காலை சுமார் 6:00 மணியளவில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் சென்னை உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து சென்னை தீவித்திடலில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் கண்ணீருடன் குவிந்த வண்ணம் உள்ளனர்.