சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று (டிச.28) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவையடுத்து, சில மணிநேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல், அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காகக் குவிந்தனர். அப்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இரவு வரை அங்கேயே பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர் என அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி, அர்ஜுன் ஆகியோர் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இன்று (டிச.29) அதிகாலை அவரது உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபன், ராதா ரவி, பாக்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் உடலை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து நல்லடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அவரது உடலை நல்லடக்கம் செய்ய, தேமுதிக அலுவலகத்தில் ஜேசிபி வாகனம் மூலம் பள்ளம் தோண்டுவது உள்ளிட்ட பணிகள் இன்று மதியம் நடைபெற்றது.
விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிலிருந்து மதியம் 1 மணியளவில் புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்து, இறுதிச் சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது என முன்னதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கட்சி அலுவலகத்திற்கு வெளியே சாலையில் நீண்ட தூரம் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் திரண்டனர். இதனையடுத்து அலுவலகத்திற்கு முன்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நல்லடக்கம் செய்யும்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் என மொத்தம் 200 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தொண்டர்களும், பொதுமக்களும் சென்னை கோயம்பேடு சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து. விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கை காண மூன்றுக்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு, தொண்டர்களுக்கு நேரலை செய்யப்பட்டது. மதியம் 3 மணி அளவில் அவரது உடலை தீவுத்திடலிலிருந்து ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு, தேமுதிக அலுவலகம் வந்த அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. இந்த இறுதி மரியாதையில் தேமுதிக கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினர் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கையைப் பிடித்து எல்.கே.சுதீஷ் நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவர் அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க தேவாரம், திருவாசகம் எனப் பாடல்கள் பாடி அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரசு மரியாதை: அரசு மரியாதை என்பது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என இதில் ஏதாவதொரு துறையில் மிகப்பெரிய பங்களிப்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தவர் இறந்து போனார் என்றால், அவருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அரசு முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:“விஜயகாந்த்தை பார்க்க வந்தவர்கள்தான் என்னைப் பார்த்தனர்”.. விஜய்யின் வளர்ச்சிக்கு கேப்டன் காரணமா?