சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வலியில்லாத சிகிச்சை மையம் இன்று திறக்கபட்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் வலியில்லாத சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், “புற்றுநேயாளிகளுக்கு கடைசி நேரத்தில் கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றபோது அவர்களுக்கு எந்த வலியும் இல்லாமல் பாதுக்காக்க வேண்டி சட்டப்பேரவையில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று இந்த சிகிச்சை மையத்தை திறந்துள்ளோம். புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு நவீனமயமாக சிகிச்சை வழங்கிட இது உருவாக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் புற்றுநோய் சிகிச்சைக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய 21 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவி தமிழ்நாட்டில் முதன் முதலாக பத்து இடங்களில் பொருத்தப்பட்டு வருகிறது.
210 கோடி ரூபாய் செலவில் சென்னையில் எம்.எம்.சி, ராயப்பேட்டை, பன்நோக்கு மருத்துவமனை என மூன்று இடங்களும், மதுரை, கோயம்பத்தூர், சேலம் என்று மொத்தம் பத்து இடங்களில் இந்தக் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.