சென்னை: மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து அதிக கனமழை பெய்து வந்தது. கனமழையின் காரணமாக தலைநகர் முழுவதும் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் பல நிவராண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு சார்பிலும், தன்னார்வாலர்கள் மற்றும் தனியார் மீட்புக்குழுக்கள் ஆகியோர் இணைந்தும் பல்வேறு விதமான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் படி, நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வகையில், சென்னையில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களும், உணவு பொருட்களும் வழங்கபட்டு வருகின்றன.
அந்த வகையில், வட சென்னைக்குட்பட்ட இராயபுரம் பனைமரத்தொட்டி பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை நீர் வடியாத காரணத்தினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட வெளியில் செல்ல முடியாமல் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முடங்கி உள்ளன.