சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே வர முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் நிதி உதவிகள் செய்து வருகின்றனர். வெள்ளித்திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் கலக்கப்போவது பாலா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த பணம் மற்றும் பொருள் உதவிகளை செய்து வருகின்றனர்.
புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, சென்னையின் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வரையும் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முழுமையாக தண்ணீர் வடியாததால் இயல்பு நிலை திரும்பவில்லை. அப்பகுதியில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.