சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் தலைநகர் முழுவதும் தண்ணீரில் முழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக மீட்பு படையினர் மூலம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்புக்குழு, தன்னார்வாலர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இணைந்து மக்களை மீட்டு வருகின்றனர்.
களத்தில் சினிமா பிரபலங்கள்:புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் நடிகர் பார்த்திபன், அறங்தாங்கி நிஷா, kpy பாலா ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டும், நிவாரண உதவிகளையும், நிவாரண உதவித்தொகையும் வழங்கி வருகின்றனர்.
நேற்று (டிச.5) முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் இணைந்து ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினர். அதனைத்தொடர்ந்து இன்று (டிச.6) காலை நடிகர் ஹரிஷ் கல்யாண் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கி வந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறும், கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மழையால் காஞ்சிபுரத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சேதம்!