சென்னை:கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் 75ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
எட்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் அண்ணல் காந்தியடிகள், பண்டித ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் சிலைகள் இடம் பெற்று கண்காட்சியைச் சிறப்பித்து வருகின்றன.
பல அரிய புகைப்படங்கள்
ஏறத்தாழ இருபது முறை தமிழ்நாட்டிற்கு வருகைதந்து தமிழர்களை-தமிழ்நாட்டை- தமிழ்மொழியை நேசித்த அண்ணல் காந்தியடிகளுக்கு விடுதலைப் போராட்ட வியூகங்களை வகுப்பதில் தமிழ்நாடு ஒரு முக்கிய களமாக விளங்கியதை வரலாறு போற்றிக் கொண்டுள்ளது.
சீரிய அவ்வரலாற்று நிகழ்வுகள் பலவற்றை எடுத்துக்கூறும் அரிய புகைப்படங்கள், இந்திய விடுதலைப் போராட்டங்களின் போது எடுக்கப்பட்ட தலைவர்கள் புகைப்படங்கள், உப்பு சத்தியாகிரகப் போராட்டம், சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்த புகைப்படங்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றும் மக்களால் இதுவரை அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் எனப் பலவும் இதில் இடம்பெற்றுள்ளன.
இவைமட்டுமல்லாமல், செய்தி மக்கள் தொடர்புத்துறையால் பராமரிக்கப்படும் நினைவகங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் உருவம் பொறித்த பழைய நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் பட்டயங்கள் ஆகியவைகளும் இடம்பெற்றுள்ளன.
கட்டபொம்மன் தூக்கிலிட்ட ஆவணம்
மேலும், பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) புத்தக நிலையம், முத்தையா ஆராய்ச்சி நூலகம், பரிசல் புத்தக நிலையம் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புகளும், தட்சிண சித்ரா குழுவினரால் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்டம் பற்றிய அருமையான பழைய மண் பொம்மைகள், மரத்தாலான ராட்டை போன்றவைகள் கண்காட்சியை மேலும் சிறப்பாக்கியுள்ளன.
தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தின் மூலம் கட்டபொம்மன் தூக்கிலிட்டது குறித்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பானர்மேன் கொடுத்த அறிக்கை, மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட விசாரணை ஆவணங்கள், ஆஷ்துரை கொலை வழக்கு பற்றிய ஆவணம், நீல் சிலை உடைப்பு குறித்த ஆவணம், வ.உ.சி. வழக்கு (திருநெல்வேலி சதி வழக்கு) ஆவணங்கள், செஞ்சிக் கோட்டை மற்றும் இதர கோட்டையின் நிலவரைகள், வேலூர் சிப்பாய்க் கலகம் பற்றிய வரலாற்று ஆவணங்கள் குறித்த புகைப்படங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.