சென்னை:கடந்த ஜனவரி 17ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டம் கூடியது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. அதில் பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லஷ்மி நாராயணன், லக்ஷ்மண சந்திர விக்டோரியா கெளரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கறிஞர்களான விக்டோரியா கெளரி, பாலாஜி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி மற்றும் திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.