சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் மிக்ஜாம் (MICHAUNG) புயலால் சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், இப்புயலானது சென்னைக்கு மிக அருகில் இருப்பதால், தொடர்ந்து காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது.
வெள்ளக்காடான சென்னை: நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழையால் சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், அண்ணாநகர், தி.நகர், பட்டாளம், வியாசர்பாடி, கொரட்டூர், மயிலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், தரமணி அடையாறு, நந்தனம், திருமங்கலம், அத்திப்பட்டு, அயப்பாக்கம் ஆகிய இடங்களில் மழைநீரானது முழுவதும் சூழ்ந்துள்ளது. இதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கடலோரா மாவட்டங்களிலும் காற்றுடன் கூடிய கனமழையானது பெய்து வருகிறது.
மின்சாரம் துண்டிப்பு: சென்னை முழுவதும் பெய்து வரும் மழையால், சென்னையில் முக்கிய பகுதிகளான திருவல்லிக்கேணி, அடையாறு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தொடர் மழை காரணமாக சென்னை முழுவதும் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. மேலும், சிறுகுறு வியாபார கடைகளும் திறக்கவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது.
மழை அளவு: காலை 4 மணி நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக 171 மி.மீ., மழையும் மலர் காலனியில், 162 மி.மீ., மழையும், சோழிங்கநல்லூரில் 162 மி.மீ., மழையும், இதே போல் பெருங்குடி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், காட்டுப்பாக்கம், அம்பத்தூர், வானகரம், கத்திவாக்கம், மீனம்பாக்கம் டி.வி.கே.நகர் ஆகிய பகுதிகளிலும், 110 மி.மீ., மழைக்கு மேல் பதிவாகி உள்ளது. மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் 100 மி.மீ., மழையை கடந்து பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலவில் வரும் மிக்ஜாம் புயல் தாக்கம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், “மிக்ஜாம் புயலானது சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கில் சுமார் 110 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டிருக்கிறது. மேலும், கடந்த 6 மணி நேரத்தில் 19 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
மேலும், அது வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரம் இடைய நிலை கொள்ளும், அதன் பிறகும் கரைக்கு இணையாக நகர்ந்து டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டனம் இடைய தீவிர புயலாக கரையை கடக்கும். இதனால் இன்று இரவு வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழையானது பெய்யும். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என அறிவுறுத்தி இருக்கிறார்.
அரசு நடவடிக்கை: சென்னையில் பெய்து வரும் மழையால் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் அவசர கால நடவடிக்கையானது தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை உள்ளிட்ட 14 சுரங்கபாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மூடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழையால் மரம் விழுந்துள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் தாக்கம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் கூறுகையில், “இந்த மிக்ஜாம் புயலால், 12 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் அதிகன மழையானது பெய்து வருகிறது. புயல் குறைவான வேகத்தில் நகருவதால், சென்னைக்கு மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த மழையானது இன்று இரவு வரை தொடரும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் தொடர் கனமழையால் சாலையில் விழுந்த பழமை வாய்ந்த மரம்!