சென்னை:தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இந்த நிலையில், வரலாறு காணாத இந்த அதி கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளில், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நேற்று (டிச.22) டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என டிசம்பர் 12ஆம் தேதி முதலே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததாகவும், மழை பாதித்த அன்று கூட 3 மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வந்ததாகவும், ஆனால் அதனை மாநில அரசும், அமைச்சர்களும் பொருட்படுத்தவில்லை எனக் கூறினார்.
மேலும், இன்ச் பை இன்ச் எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்த பிறகும்கூட, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுக்காமலிருந்தது ஏன் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
மேலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக செலவு செய்த ரூ.4,000 கோடி எங்கே போனது என்றும், 92 விழுக்காடு பணிகளை முடித்துவிட்டதாகக் கூறி, பின்னர் கேள்வி எழுந்ததை அடுத்து 45 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகக் கூறியது ஏன் எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.