சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், நடிகருமாக வலம் வருபவர், வெங்கட்பிரபு. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர். இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான முறையிலும், காமெடியாகவும் அமையும். வெங்கட் பிரபு - யுவன் கூட்டணியில் அமையும் பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் தெறிக்கும்.
இவர் எடுக்கும் அனைத்துப் படங்களிலும் பிரேம்ஜி இருப்பார். தனது தம்பிக்கென தனியாக ஒரு கேரக்டரை உருவாக்கிவிடுவார், வெங்கட் பிரபு. இவர் சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவை வைத்து “கஸ்டடி” என்னும் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி பரவலான வெற்றி கண்டார். இப்படத்தை பவன் குமார் வழங்க ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு கூட்டணியில் இவர் இயக்கிய “மாநாடு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. மேலும், டைம் லூப் திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் என்ற பெயரைப் பெற்றார். அதேபோல், முன்னர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரை வைத்து மிகப்பெரிய வெற்றி படமான “மங்காத்தா” திரைப்படத்தை இயக்கினார். பின்னர், தளபதி விஜயை வைத்து எப்போது இயக்குவார்? என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது “தளபதி 68” படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.