தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ.க - அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி தோல்வியைத் தழுவும். எனக்கு பாதுகாப்பு அளிக்ககோரி டிஜிபி, தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், நடவடிக்கை இல்லை. எங்களின் கூட்டணியில் இருக்கும் பல கட்சிகளைச் சார்ந்த தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. பாமக மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம் மற்றும் அதிமுக சுரேஷ் ஆகியோர் என்னுடைய கட்சியைச் சேர்ந்த அரியலூர் மாவட்ட செயலாளர் சம்பத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.
வேல்முருகனை கொலை செய்ய வேண்டும். யார் யார் எவ்வளவு தருகிறீர்கள் என்று ஒரு பாமக கூட்டத்தில் கேட்கின்றனர். வன்னியர் சங்க உறுப்பினர் ஒருவர் எழுந்து பத்தாயிரம் தருகிறேன் என்கிறார். அந்த கூட்டத்தில் 74 ஆயிரம் ரூபாய் பணம் வசூலாகியுள்ளது. இதை வார இதழ் பத்திரிகைகள் வீடியோவாக வெளியிட்டது. வடதமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வேல்முருகன் வாக்கு சேகரிக்க வந்தால் கொலை செய்யப்படுவார் என்று பாமகவினர் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் பிள்ளாயார்குப்பம் ஒன்றியச் செயலாளர் சரவணன் தலை வெட்டி வீசப்படும் என்று முகநூலில் பதிவிடுகின்றனர். தருமபுரிக்கு வந்தால் வேல்முருகன் உயிரோடு திரும்ப முடியாது. எங்க சின்ன ஐயாவுக்கு எதிராக வாக்கு சேகரிக்க வந்தால் கொலை செய்வோம் என்று மிரட்டல் வருகின்றது. தேர்தல் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி தராமல் சூழ்ச்சி செய்கின்றனர். மோடிக்கு எடுபிடி செய்கின்ற அரசுக்கு தேர்தல் ஆணையமும் எடுபிடியாக செயல்படுகின்றது. எல்லா கட்சியினரின் கொடிக்கும் அனுமதி தரப்படுகின்றது. ஆனால், வேல்முருகன் கட்சி கொடி என்றால் மட்டும் இலுப்பை காய் போல் இருக்கிறதா..? இது போல் ஜனநாயக உரிமையை பறித்து ஒரு தலை பட்சமான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு பாமக, அதிமுகவின் பூச்சாண்டிக்கு நான் பயப்படமாட்டேன். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. நான் பனங்காட்டு நரி அல்ல.. பனங்காட்டு புலி. பாமகவிலிருந்து விலகிய நாள் முதல் என் வாகனத்தை தாக்குவது, என் கட்சியினரைத் தாக்குவது என தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாமக, வன்னியர் சங்கத்தை எதிர்த்து யாரையும் அரசியல் செய்ய விட மாட்டார்கள். அரியலூரில் நடந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனக்கும், என் கட்சியினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.