சென்னையில் பறக்கும் ரயில் பாலம் சரிந்து விழுந்து விபத்து சென்னை: வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை கடந்த 2008இல் ரூ.495 கோடி மதிப்பீட்டில் பறக்கும் ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வந்தன. இதில் 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 167 தூண்கள் உடன் பறக்கும் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த காலதாமதம் ஆனதால் பறக்கும் ரயில் திட்டம் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. மேலும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பறக்கும் ரயில் மேம்பாலம் பணிகள் முடிவடையாததால் அதன் மதிப்பீடு மேலும் அதிகரித்தது.
இதையடுத்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகளில் பறக்கும் ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு ரயில் சிக்னல் கட்டமைப்புகளும் செய்து முடிக்கப்பட்டன. இந்தநிலையில் நீதிமன்றம் மூலம் நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் முடித்து வைக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு பறக்கும் ரயில் பாதை பணிகளில் விடுபட்ட பணிகள் தற்போது நடைபெற்று வந்தது.
ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேல் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (ஜன. 18) மாலை வழக்கம் போல் தில்லை கங்கா நகர் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது அங்கு அமைக்கப்பட்ட தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலம் திடீரென சரிந்து பாரம் தாங்காமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் பகுதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் விபத்து நடைபெற்ற போது பணியாளர்கள் யாரும் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆதம்பாக்கம் போலீசார் மேம்பால விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென பறக்கும் ரயில் பாதைக்கான பாலம் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: 70% இயற்கை வளங்களை அளித்து விட்டோம்: மதுரை பாலம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து..!