சென்னை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்வது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வீர ராகவ ராவ் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், “பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து அடையாள அட்டை பெற உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளிலேயே வேலை வாய்ப்புப் பதிவு
இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, கால விரயம், தேவையற்ற அலைச்சல்கள், கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது 2020 - 2021ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் வருகின்ற நான்காம் தேதி வழங்கப்பட உள்ளது.
ஆகையால் மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே வருகின்ற நான்கு முதல் 18ஆம் தேதி வரையிலும் ஒரே பதிவு, மூப்பு தேதி ஆகியவை வழங்கி வேலைவாய்ப்பு பதிவுப் பணிகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக், தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.
மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள், https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் தங்கள் கல்வித் தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை மாணவர்கள் அணுகலாம். பதிவுகள் மேற்கோள்ளும் போது அரசு விதித்துள்ள கரோனா வழிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!