தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 18) தீர்ப்பு வழங்குகிறது.

chennai high court
chennai high court

By

Published : Aug 17, 2020, 8:47 PM IST

Updated : Aug 18, 2020, 7:22 AM IST

கடந்த 1993ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், 1994ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆலையை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. ஆலை அமைக்கப்பட்ட இடத்தில் வசிப்பவர்களுக்கு அகிகளவில் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, தேசிய அறக்கட்டளை என்ற அமைப்பு 1996ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, 1998ஆம் ஆண்டு நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி அபராதம்

அதனடிப்படையில், 1998ஆம் ஆண்டு நவம்பரில் முதன் முதலாக ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம், ஆலை இயங்க அனுமதித்தது. 2010ஆம் ஆண்டு செப்டம்பரில் சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டி ஆலையை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அடுத்த மூன்று நாள்களில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் விஷவாயு கசிவு காரணமாக ஆலை மூடப்பட்டது.

தூத்துக்குடியில் ஏற்படுத்திய மாசுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகவும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் இழப்பீடாகவும் 100 கோடி ரூபாயை வழங்க ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

13 பேர் உயிரிழப்பு

கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டது. அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை

ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோன்று, ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

தொடர் எதிர்ப்பும் வழக்குகளும்

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை தொடங்கியது. 39 நாள்கள் விசாரணைக்கு பின், 2020ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. மூன்றாவது அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு முதலில், நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர், நீதிபதி சத்தியநாராயணன், மதுரைக் கிளைக்கு மாற்றப்பட்டதையடுத்து அவ்வழக்கு, நீதிபதி சசிதரன் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு சென்றது.

இன்று தீர்ப்பு

ஆனால், இவ்வழக்கை விசாரிக்க இயலாது எனக் கூறி, வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதி சசிதரன் பரிந்துரை செய்ததால், வழக்கை விசாரிக்க நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டது. மேலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (ஆக.18) சென்னை உயர் நீதிமன்றம் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாஜக கொடி கம்பத்தில் தேசியக்கொடி : பாஜக தலைவர்கள் மீது புகார்

Last Updated : Aug 18, 2020, 7:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details