சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (அக்.24) நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "ஐரோப்பாவில் பெரியாரிய உணர்வாளர்கள் நடத்திய இணையதள மாநாட்டில் பேசியபோது, அதில் ஒரு சிறு பகுதியைத் துண்டித்து எனக்கு எதிரான அவதூறு பரப்புரையை சனாதன கும்பல் ஒன்று பரப்பி இருக்கிறது.
அந்த உரையை அனைத்துப் பெண்களும் கட்டாயம் முழுமையாகக் கேட்க வேண்டும். பெண்களை இழிவுப்படுத்திவிட்டதாக என் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். மகளிரையும் மனிதகுலத்தையும் இழிவுப்படுத்தி உரைக்கும் மனுதர்ம நூலை முதலில் தடை செய்ய வேண்டும்.
பாஜகவின் நோக்கம் என்னை விமர்சிக்க வேண்டும் என்பதல்ல, திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே! அதற்கு திமுக தக்க பதிலடி கொடுத்துள்ளது. என் மீது வழக்குப் பதிவு செய்ததை வரவேற்கிறேன். அந்த வழக்கை எதிர்கொண்டு நீதிமன்றத்தில் நான் விவாதிக்கிறேன். மனுநூலை யார் படிக்கவில்லை, யார் படித்திருக்கிறார்கள் என்று பொது வெளியில் விவாதிக்கப்பட வேண்டும். பாஜகவில் மனு நூல் பற்றி என்னுடன் விவாதம் செய்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை.
மனு நூல் குறித்து என்னுடன் விவாதிக்க பாஜகவில் யாருக்கும் தகுதி இல்லை - திருமாவளவன் எஸ்.வி.சேகர் போன்ற பாஜகவினர் தொடர்ந்து பெண்களை இழிவாகப் பேசி இருக்கிறார்கள். அவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அம்பேத்கர் பேசியதையும், பெரியார் பேசியதையும் தான் நான் பேசியிருக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க:'திருமாவளவன் பேசியது கண்டனத்திற்குரியது!'