இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட தேசிய ஆணையம் பட்டியலினத்தவருக்கான ஆணையம் ஆகும். தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டதையடுத்து மாநிலங்கள் எல்லாவற்றிலும் மாநில அளவிலான ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை மாநில அளவிலான பட்டியலினத்தவருக்கான ஆணையம் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பாகப் பலமுறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தியும் கூட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்காக வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது, ஆறு மாதங்களுக்குள் மாநில ஆணையத்தை உருவாக்குகிறோம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
அவ்வாறு உறுதியளிக்கப்பட்டு சுமார் ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும்கூட அந்த ஆணையம் உருவாக்கப்படவில்லை. தேசிய ஆணையத்தின் இயக்குநர் அலுவலகம் மட்டுமே இங்கே இருக்கிறது. அதிலும் இயக்குநர், துணை இயக்குநர் உதவியாளர்கள் உள்ளிட்ட 8 பதவிகள் நீண்ட நாள்களாகவே காலியாக உள்ளன.
இந்திய அளவில் பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதை தேசிய குற்ற ஆவண மைய அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. இந்த வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் மத்திய அரசும் பின்பற்றுவதில்லை; தமிழ்நாடு அரசும் பின்பற்றுவதில்லை.