சென்னை:நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் அஜித்குமார் நடிப்பில் ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜன.11 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் ரசிகர் மன்றங்கள் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தேவராஜன் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் “வருகிற 11ஆம் தேதி விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் நாடு முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், சென்னையைச் சுற்றிய திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்த டிக்கெட் விலையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் அரசு நிர்ணயம் செய்த 4 காட்சிகளைத் தாண்டி, 6 காட்சிகள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவ்வாறு அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்வதால், பொதுமக்களிடம் இருந்து 3,000 கோடி ரூபாய் வரை திரையரங்க உரிமையாளர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அரசு உத்தரவை மீறி செயல்பட்டு வருகிறது.
வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யும் திரையரங்க உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தேவராஜன் புகார் அளித்துள்ளார் அரசாணைப்படி சிறப்புக் குழுவைத் தொடங்கி, அனைத்து திரையரங்குகளிலும் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா எனக் கண்காணிக்க வேண்டும். மேலும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் தொடர்பாக அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பணத்தைத் திருப்பி தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ரூ.1000க்கு விற்கப்பட்ட துணிவு டிக்கெட்..? ரசிகர்கள் கொந்தாளிப்பு..!