சென்னை:கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக, சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ப.வளர்மதி மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து ப.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து, 2012ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வாறு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இதையும் படிங்க:அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: சசிகலாவின் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வளர்மதி சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜரானார். அவர் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், எண்ணிடும் நடைமுறைகள் முடிந்துவிட்ட நிலையில், அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறினார்.
மேலும், வழக்கு குறித்த சில ஆவணங்களை பதிவுத் துறையிடமிருந்து பெற வேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கில் வாதங்களைத் தொடங்க வேண்டும் என்று வளர்மதிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:குமரியில் கொட்டும் மழை.. இடிந்த வீட்டிற்குள் 80 வயது முதியவருடன் தவிக்கும் குடும்பம்.. மாற்று வீடு கட்டித்தர அரசுக்கு கோரிக்கை!