90களில் பிறந்த ஒருவர் இப்போது கிரிக்கெட்டில் யார் ரசிகராக இருந்தாலும் அவரது ரசனை புள்ளி சச்சினிடத்திலிருந்தும், சினிமாவில் இப்போது எந்த கதாநாயகனை அவருக்கு பிடித்திருந்தாலும் அவரது ரசனை புள்ளி ரஜினியிடமிருந்தும் ஆரம்பித்திருக்கும்.
அப்படி 90களில் பிறந்து இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பலரில் பாதி பேரின் ரசனை புள்ளி வைரமுத்துவிலிருந்து தொடங்கியது.
வைரமுத்து, தமிழ் சினிமா வேறு பாதையில் தனது பயணத்தை ஆரம்பித்தபோதும், மாடர்னாக மாற ஆரம்பித்த காலக்கட்டத்திலும் பாடல்கள் எழுத வந்தவர். இளையராஜாவுக்கு எழுதிய தனது முதல் பாடலில், “வானம் எனக்கொரு போதி மரம்” என்று கூறி புத்தருடன் கை குலுக்கியவர்
கண்ணதாசன், வாலி என்ற இரண்டு ஆளுமைகளும் இயங்கிக்கொண்டிருந்தபோது ஒருவர் வந்து தனது ஆளுமையை நிரூபிப்பது அவ்வளவு சாதாரணமில்லை. அதை செய்துகாட்டினார் வைரமுத்து.
தமிழ் சினிமாவின் இசையை மடைமாற்றிய இளையராஜாவுக்கு வைரமுத்து தனது வரிகளால் துணை நின்றார்.
”என்னமோ ராகம், என்னென்னமோ தாளம் தலைய ஆட்டும் புரியாத கூட்டம்”, ”சேரிக்கும் சேர வேணும் அதுக்கும் பாட்டு படி” என்று பாடறியேன் படிப்பறியேன் பாடலில் வைரமுத்து எழுதி, இளையராஜா எப்படி இசையை சாமானியர்களுக்காக மாற்றினாரோ அதேபோல் வரிகளையும் சாமானிய மொழிக்கு மாற்றினார்.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் கண்ணதாசன் தத்துவ மொழி எழுதினார், வாலி வாழ்க்கை, கொண்டாட்ட மொழி எழுதினார், வைரமுத்து கிராமத்து மொழி எழுதினார்.
அதுமட்டுமின்றி, வைரமுத்து வருகைவரை புதுக்கவிதையின் வாசம் திரைப்பாடல்களில் பட்டும் படாமல் இருந்தது. அவர் வந்துதான் சினிமா பாடல்கள் மேல் புதுக்கவிதையை முழுதாக போர்த்தினார். அறிவியல் விஷயங்களை ரசிகர்களின் காதுகளுக்குள் எளிதாக புழங்க வைத்தார்.
இளையராஜாவுடனான பிரிவுக்கு பிறகு பல இசையமைப்பாளர்களுடன் வைரமுத்து பணியாற்றியிருந்தாலும் ரஹ்மானின் வருகை அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து சென்றது. ரஹ்மானோடு வைரமுத்து கை கோர்த்திருந்த காலத்தில்தான் தமிழ் சினிமா பாடல்களுக்குள் புது புது வார்த்தைகள் அறிமுகமாகின.
கவிஞனோ, பாடலாசிரியனோ பாத்திரத்தில் விழும் நீர் போல் இருக்க வேண்டும். வைரமுத்து எந்த பாத்திரத்துக்கும் பொருந்திப்போகக்கூடிய நீர்.