தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: ஆளுநருக்கு கடிதம் எழுதிய வைகோ - நீட் தகுதித் தேர்வு

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஆளுநருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

vaiko urges Governor to expedite approval of bill to provide 7.5 per cent quota for students in government schools
vaiko urges Governor to expedite approval of bill to provide 7.5 per cent quota for students in government schools

By

Published : Oct 20, 2020, 11:01 AM IST

வைகோ எழுதிய கடிதத்தில், “ தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது என்பது சமநீதிக்கு முரணானது. எனவே, அவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 0.15 விழுக்காடு என்பது வேதனை அளிக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, நடப்பு ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு அளித்திட முடிவு எடுத்தது. அதனைச் செயல்படுத்தும் வகையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தங்கள் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு அரசு பள்ளி மாணாக்கர்கள், மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கையின்போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கவும், இடஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப்படையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யவும், இடஒதுக்கீட்டு முறையினை அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசு கல்லூரிகளுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு இடங்களுக்கும் இச்சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் சுமார் 41 விழுக்காடு மாணவர்கள் அரசு பள்ளிகளில்தான் பயில்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் ஐந்தாயிரத்து,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக நான்காயிரத்து,43 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களில் 0.15 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப் படிப்பில் சேர இடம் கிடைக்கிறது. இது சமூக சமநீதி கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பு ஆண்டிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும்.

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது.

இதனைக் கவனத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல், உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள சட்ட முன்வடிவுக்கு தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details