சென்னை:காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின் படி காவிரியில் நீர் திறப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
அதில், தமிழக அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழகத்துக்கு அக்டோபரில் 140.099 டிஎம்சி நீரைக் கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால், நடப்பாண்டில் இதுவரை 56.394 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளது. 83.705 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. மேட்டூர் அணையில் 18 டிஎம்சிக்கும் குறைவான அளவில் நீர் இருப்பு உள்ளது. தமிழக விவசாயிகளின் நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்கு விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தினார்.
அதற்குக் கர்நாடக அரசின் தரப்பில், ‘‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் குறைந்த அளவில்தான் நீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. எனவே தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது. தற்போது அணையில் இருக்கும் நீரைக் கொண்டே குடிநீர் மற்றும் விவசாய தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
மேகதாதுவில் அணைக் கட்டினால் மழைக்காலங்களில் அதிகளவில் நீரைத் தேக்க முடியும். வீணாகக் கடலில் காவிரி நீர் கலப்பதைத் தடுக்க முடியும். எனவே, மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதிக்கவேண்டும்'' என வலியுறுத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னைக்கு, மேகதாது அணை திட்டத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் விவரிப்போம்” என்று கூறி இருந்தார்.