நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இறுதிவரை போராடி தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தனது கூட்டணி கட்சி தலைவர்களை அவர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, “விளிம்புநிலை மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடுபவருமான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பல தடைகளை தாண்டி மக்களின் ஆதரவு பெற்று சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற ரவிக்குமாருக்கும் மதிமுக சார்பில் பாராட்டுகள். இருவரும் நாடாளுமன்றத்திற்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் இனி தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்” என்றார்.
வைகோ திருமாவளவன் சந்திப்பு திருமாவளவன் பேசுகையில், “நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் அமைக்கப்பெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது. ஸ்டாலின், வைகோ, கே.எஸ். அழகிரி ஆகிய தலைவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து இந்த கூட்டணியோடு இணைந்து செயல் படுவோம். வெற்றியை திமுகவிற்கு உரித்தாக்குகிறோம். பதவி ஏற்றவுடன் நாடாளுமன்றத்தில் முக்கியமான கோரிக்கைகளை எழுப்புவோம்” என்று தெரிவித்தார்.