இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டம் வரகனூர் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில், கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், ஆலை வெடித்துச் சிதறி, ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் உடல் கருகியும், படுகாயமுற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்போது கிடைத்துள்ள அதிர்ச்சிதரத்தக்க தகவல், நெஞ்சைப் பதறச் செய்கின்றது. மூடிச் சீல் வைக்கப்பட்டுள்ள அந்த ஆலையின் ஒரு பகுதி கட்டடத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள், இன்று காலை வெடித்துச் சிதறியதில், ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மாங்குடி கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களான கோபால், கனகராஜ், அர்ஜூன், குருசாமி, காமராசர் ஆகிய ஐவர் கோரமான முறையில் இறந்து விட்டனர்.
பட்டாசு ஆலையை மூடி சீல் வைப்பதற்கு முன்பு, ஆபத்தான பட்டாசுகளோ, இரசாயனக் கலவைகளோ வெடித்ததால் உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் பொருட்களோ, ஆலை வளாகத்தில் இல்லை என்பதை, அரசு நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையும் உறுதிப்படுத்தாதது ஏன்? குறைந்தபட்சம் ஆலைக்குள் ஆபத்தான பொருட்கள் உள்ளது என்பதைக்கூட அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தாதது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன.
அப்பாவித் தொழிலாளர்கள் ஐவரின் உயிர் இழப்புக்குக் காரணமான தமிழ்நாடு அரசின் சம்பந்தப்பட்ட துறையின் பொறுப்பு அற்ற போக்கிற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்குக் காரணமான துறை அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆலையை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து, எஞ்சி இருக்கின்ற ஆபத்தான பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். உயிர் இழந்த தொழிலாளர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், உற்றார் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.