சென்னை:நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றையை வெளியிட்டுள்ளார். அதில், "நீட் தேர்வில் முதல் 100 இடங்களைப் பெற்ற தமிழக மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் நேற்று (ஆகஸ்ட் 13) ஆளுநர் மாளிகையில் எண்ணித் துணிக என்னும் தலைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை, 'நீட் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்களின் பெற்றோர் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்?' என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் அவர் நீட் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அவரிடமிருந்து ஒலி பெருக்கிப் பறிக்கப்பட்டதாகவும், அவரை மிரட்டும் தொனியில் ஆளுநர் பேசியதாகவும் கூறுப்படுகிறது.
பின்பு அந்த பெற்றோரின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளிக்கும் போது, 'நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். கல்வி பொதுப் பட்டியிலில் உள்ளது, நீட் தேர்வு ரத்து மசோதா குடியரசுத் தலைவரிடம் உள்ளது. அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் எனக்கு இருந்தால், நீட் தேர்வு விலக்கு மசோதாவில் நான் கண்டிப்பாக கையெழுத்து இட மாட்டேன்' என்று ஆணவத்துடன் கொக்கரித்துள்ளார்.