தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் விவகாரத்தில் மக்களை தொடர்ந்து ஏமாற்றும் எடப்பாடி' - வைகோ ஆவேசம்!

சென்னை:  நீட் விலக்கு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

By

Published : Jul 6, 2019, 11:30 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிராகரிக்கப்பட்ட தகவல் பழனிச்சாமி அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும். ஆனால், அந்த செய்தியை மறைத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவோம் என்று தமிழ்நாடு மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்த செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.

நீட் தேர்வால் சமூக நீதிக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது மட்டுமின்றி, சாதாரண ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பைக் கனவில்கூட நினைக்க முடியாத நிலைமையை பா.ஜ.க. அரசு உருவாக்கி இருக்கிறது.

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மாணவி அனிதா 2017 செப்டம்பரில் தற்கொலை செய்துகொண்டார். 2018 ஆம் ஆண்டு செஞ்சி அருகில் உள்ள பெருவளூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி மகள் பிரதீபா நஞ்சு அருந்தி மாண்டுபோனார்.

மேலும், திருச்சியில் மாணவி சுபஸ்ரீ, சென்னை சேலையூரில் ஏஞ்சலின் ஸ்ருதி போன்ற மாணவிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்தாண்டு 2019 ஆம் ஆண்டு, நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன், திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, மரக்காணம் மோனிசா போன்ற மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி அரசின் பொய்யான வாக்குறுதியால் இந்த மாணவிகள் உயிரைப் போக்கிக் கொண்ட சோகம் நிகழ்ந்தது. பா.ஜ.க. அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கல்வித் துறையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதற்குப் புதியக் கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதுடன், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ப்பதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details