சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைகோ வெளியிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "இந்தத் தேர்தல் அறிக்கையில் இந்துத்துவ சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை சாய்த்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் சூழலில் இங்கிருக்கும் அதிமுக அரசு, அதற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
சமூக நீதியைப் பாதுகாக்க இந்துத்துவா சக்திகளுக்கு துணையாக இருக்கும் ஊழல் ஆட்சியான அதிமுக அரசை சாய்த்து, திமுக கூட்டணி ஆட்சி மலர தேர்தல் அறிக்கை தயார் செய்து உள்ளோம். எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான 97 பக்க குற்றப் பத்திரிகையை ஸ்டாலின் ஆளுநரிடம் அளித்துள்ளார். அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர், உணவு அமைச்சர் , சுகாதாரத்துறை அமைச்சர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் காவல் துறை அடக்கு முறைகள் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று உள்ளன.
'முதலமைச்சர் கூறும் குற்றச்சாட்டுகளில் ஒன்றில்கூட உண்மை இல்லை' - வைகோ ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவும் தடை விதித்து ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கி வருகிறது. விவசாயிகளுக்கு எல்லா விதத்திலும் கேடு செய்யக்கூடிய வகையில், நாசகாரத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பெருநிறுவன கம்பெனிகளுக்கு அதிமுக அரசு கள்ளத்தனமாக துணைபோய் இருக்கிறது.
நீண்ட நெடிய போராட்டத்தில் தியாகம் செய்து சித்ரவதைகளை அனுபவித்து, 'ஒன்றிணைவோம் வா' , கிராமசபைக் கூட்டங்களை நடத்தி , 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின், விடியலை நோக்கி' உள்ளிட்டப் பல்வேறு திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
இப்போதே, திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. கருத்துக்கணிப்புகளும் இதைத்தான் குறிப்பிடுகின்றன. திமுக தேர்தல் அறிக்கையை செயல்படுத்தும்போது தமிழ்நாட்டில் ஒரு பொற்கால ஆட்சி அமையும். மாநில உரிமை, சமூக நீதிக்கு குரல் கொடுப்போம்.
தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும் , நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கவும் பாடுபடுவோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திருப்பப் பெற குரல் கொடுப்போம். சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவோம். மதுவிலக்கை வலியுறுத்துவோம். வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துவோம். அயலகத் தமிழர் பாதுகாப்புக்காக, அயலகத் தமிழர் ஆணையம் அமைக்க குரல் கொடுப்போம்.
ஏழு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுப்போம். அனைத்தையும் சிந்தித்து செயல்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகள் பல சோதனைகளுக்கு மத்தியில் மதிமுகவைத் தூக்கி நிறுத்தி இருக்கிறோம். ஜெயலலிதா மரணத்துக்கு ஸ்டாலின்தான் காரணம் என முதலமைச்சர் சொல்லும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட உண்மை கிடையாது" என்றார்.
இதையும் படிங்க:கணவரின் ஆட்டோவில் வாக்கு சேகரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!