தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அசோக் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: வைகோ - கம்யூனிஸ்ட்’

சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அசோக்கின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Ashok

By

Published : Jun 14, 2019, 2:58 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருநெல்வேலி மாநகர், தச்சநல்லூர் பகுதி, கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அசோக் (24) கடந்த 2019 ஜூன் 12ஆம் தேதியன்று இரவு, பணி முடித்து ஊர் திரும்பும் வழியில் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

இக்கொடிய செயலுக்கு மதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இரு பிரிவினரிடையே சில தினங்களாக முன்பகை இருந்ததாகவும், இது குறித்து ஓரிரு வழக்குகள் தச்சநல்லூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் புகார்களின் மீது காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியதன் விளைவாகவே இப்படுகொலை நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் தழைக்கத் தொடங்கியுள்ள சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, மாவட்டத்தின் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் செயலாகவே அசோக்கின் படுகொலை நிகழ்ந்துள்ளது. இந்தப் படுகொலையைச் செய்த குற்றவாளிகள் பொது அமைதிக்கும், சாதிய நல்லிணக்கத்திற்கும் கொடிய தீங்கு விளைவிப்பதால் அவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் ஆவார்கள்.

அசோக்கின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். படுகொலை செய்யப்பட்ட அசோக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, அரசு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்றும், இளைஞர் அசோக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்து கூண்டில் நிறுத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசை மதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details