தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தியாகப் பெருநாள் ஒரு பொன்னாள் - வைகோ வாழ்த்து - etv bharat

சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலு சேர்க்க வாய்த்திட்ட தியாகப் பெருநாள் ஒரு பொன்னாள் என இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வைகோ வாழ்த்து
வைகோ வாழ்த்து

By

Published : Jul 20, 2021, 9:38 AM IST

சென்னை: இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று (ஜூலை 20) உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது. தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தள்ளாத வயதில் பெற்றெடுத்த இஸ்மாயிலை, நபி இப்ராகீம் (அலை) பலியிட முன்வந்த தியாகம் இன்றவும் உலகெங்கும் நினைவுகூரப்படுகின்றது. இந்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக நடைபெற்றது.

ஒன்றே குலம்; ஒருவனே தேவன்

நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உணர்வுடன், அரபா பெருவழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை ஐயமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

இந்நாள் ஒரு பொன்னாள்

தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் இஸ்லாமிய பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலு சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

மதச்சார்பின்மை இந்தியாவின் ஜனநாயகம்

மதச்சார்பின்மைதான் இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கின்ற அரணாகும். அதனைதகர்பதற்கு அராஜக சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசே பக்க பலமாக செயல்படுவது இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து, விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே மதச் சார்பின்மையை காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அனைவரும் உறுதிகொள்வோம்.

வைகோ வாழ்த்து

இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இந்திய வீரர்களுக்கு ‘செல்பி ஸ்பாட்’ மூலம் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details